தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சென்னை சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை திரண்டனர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
கனமழை மற்றும் வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. துாத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகள், கடைகள், குறு,சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், மீன்பிடி தொழில், உப்பளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசம் அடைந்துள்ளன.

ஆனால், தவிக்கும் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட மத்திய அரசு முன்வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 21,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், மத்தியஅரசு இதுவரை உரிய நிவாரணம் வழங்கவில்லை. எனவே தமிழக அரசு கேட்ட, ரூ.21,000 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal