‘‘சமூக வலைத்தளங்களில் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது , பிற கட்சிகளின் ஐடிவிங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்’’ என அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு, அப்பிரிவின் மாநில செயலாளராக ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக மண்டல வாரியாக புது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (3ம் தேதி)நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘அதிமுக அரசின் சாதனைகளையும், திமுக அரசு செய்ய தவறியதையும், தவறுகளை மக்களிடம் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்’’ என பேசியுள்ளார்.

மேலும், ‘‘தகவல் தொழில்நுட்ப பிரிவு யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். எந்த விவகாரம் என்றாலும் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம், உங்களுக்காக நான் எப்போதும் உடன் இருப்பேன், அதனால் தான் ஆண்டின் முதல் கூட்டமாக தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் உள்ளவர்கள் உங்களது செயல்பாட்டை மறைமுகமாக கண்காணிப்பாளர்கள் என தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்களில்யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது , பிற கட்சிகளின் ஐடிவிங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்’’ என அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளராக ராஜ் சத்தியன் நியமிக்கப்பட்ட பிறகு, ஆளும் தி.மு.க.வின் குறைபாடுகள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இது ஆளும் தி.மு.க.விற்கு பெரும் சவாலாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal