ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் பச்சரிசி சர்க்கரை, கரும்புடன், ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கம். அதிலும் தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையை தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரேசனில் பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ‘மிச்சாங்’ புயல் பாதிப்புடன் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பெரிய பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீளாமல் உள்ளனர். அரசு உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனேகமாக ஜனவரி 2-வது வாரம் தான் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. ரேஷனில் ஜனவரி மாதம் எந்த தேதிகளில் பொங்கல் பரிசு வழங்குவது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதில் முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 15-ந்தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, பொங்கலை கருத்தில் கொண்டு 2 நாட்கள் முன்னதாக 13-ந்தேதியே அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாமா? என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எனவே பல குடும்பங்களுக்கு அடுத்த மாதம் 2 முறை ரூ.1000 பணம் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal