கடந்த 2006-11 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. 2016 ஏபர்ல் 18ஆம் தேதி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சுந்தரமூர்த்தி.

அப்போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்வதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன முக்கிய காரணம், சொத்துகளை பெறுவதற்காக அமைச்சர் பொன்முடி தனது மனைவிக்கு முறைகேடாக பணத்தைக் கொடுத்தார் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டது என்பதுதான்.

அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கு விவசாயம் மற்றும் அவரது பெயரில் நடத்தப்படும் சில தொழில்களின் மூலம் தனிநபர் வருமானம் இருக்கிறது. அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார். கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், பொன்முடியின் துணையுடன் விசாலாட்சி, வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வாங்கியதாக ஆதாரங்களுடன் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை. வருமானத்தை மீறிச் சொத்துகளை வாங்கியதாக கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு சிறு ஆதாரமும் இல்லை, எனவே இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரிக்கணக்கு அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறு எனவும், 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் விடுதலை செய்துள்ளதாகக் கூறி, பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10 . 45க்கு நீதிபதி ஜெயச்சந்திரன், ‘3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 30 நாட்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனைக் காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார் பொன்முடி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal