கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட தி.மு.க.வில் முக்கிய புள்ளி ஒருவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அவர் யார் என்று விசாரித்தபோது மாவட்ட கவுன்சிலர் தீபா சின்ராஜ்தான் என்ற தகவல் கசிந்தது. இது பற்றி மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருச்சி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தீபா சின்ராஜ்! இவரது கணவர் சின்ராஜ் தி.மு.க.விற்காக கடுமையாக உழைத்தவர்.

கொரோனா காலகட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவகளை வழங்கியவர் தீபா சின்ராஜ். தற்போது, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் அமைச்சர் மகன் பெயரைச் சொல்லி ஆட்டம் போடும் நிர்வாகி, தன்னைத் தவிர யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதால், அனைவரையும் ஓரங்கட்டி வருகிறார். இவர் கட்சி வேலையைப் பார்க்கிறாரோ இல்லையோ, காண்ட்டிராக்ட் வேலையைத்தான் பார்க்கிறார்! இதனால், ஒட்டுமொத்த தி.மு.க. நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில்தான், ‘குரும்பர்’ சமுதாயத்தைச் சேர்ந்த தீபா சின்ராஜ் பா.ஜ.க.வில் இணையப் போகிறார். சமீபத்தில்தான் திருச்சி மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு உறுப்பினராக தேர்வானார். குறிப்பாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான ‘குரும்பர்’ சமுதாய வாக்குகள் உள்ளன. தி.மு.க. சார்பில் நெப்போலியனும், அ.தி.மு.க. சார்பில் கே.கே.பி.யும் போட்டியிட்டபோது, அங்கு அதிகமாக வசிக்கும் முத்தரையர்களின் ஆதரவு கே.கே.பி.க்கு இருந்தது.

ஆனால், ‘குரும்பர்’ மற்றும் ‘ரெட்டியார்’ சமூக வாக்குகள் மைனாரிட்டியாக இருந்தாலும், அனைவரும் ஒன்றிணைந்து நெப்போலியனை எம்.பி. ஆக்கினார்கள். இப்படி கட்சிக்காக தீபா சின்ராஜ் உழைத்தும், அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் புலம்பி வந்தனர். இந்த நிலையில்தான் தீபா சின்ராஜ், தனது ‘குரும்பர்’ சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான நபர்களுடன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் கசிகிறது’’ என்றனர்.

நெருப்பில்லாமல் புகையுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal