வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறியதை அடுத்து நாளை தண்டனை விவரம் வெளியாக உள்ள நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களில் உண்மைத்தன்மை இல்லை என்றும், மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும் பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்த தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதால் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என்று கூறியதை அடுத்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் தண்டனை விவரங்கள் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்கி பதவி தக்க வைக்க முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக அவதூறு வழக்கில் ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது எம்.பி. பதவி மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி பறிக்கப்பட்டது. ஆனால், ஊழல் வழக்கு அல்லாத அவதூறு வழக்கு என்பதால் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததும் மீண்டும் அவருக்கு எம்.பி. பதவி கிடைத்துவிட்டது. ஆனால், ஊழல் வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை நடைமுறையை நிறுத்தி வைக்க முடியுமே தவிர குற்றவாளி என்ற நிலையை நிறுத்தி வைக்க முடியாது என கூறப்படுகிறது.

இதனால், நாளை சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கும் பட்சத்தில் பொன்முடியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும். மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி இரு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக எம்எல்ஏ அல்லது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal