ஒன்றிய அரசு மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்: ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே எஸ்சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்ட விழ்த்துவிடப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்ட ஆட்சியாளர்கள், இந்த சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழடிப்பதை நோக்கமாக கொண்டு உள்ளார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற எஸ்சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 13,626 பேர் சாதிய பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் வெளியேறியதாக ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஒன்றிய அமைச்சரே பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளார்.

சாதிய பாகுபாடு காரணமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி பயில முடியாமல் வெளியேறுவதாக அமைச்சரே சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் வகையில், எஸ்சி, எஸ்டி, பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இந்த அராஜக செயலை கண்டித்து கோவையில் 18ம் தேதி எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal