தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளதாக பத்திரிகைகளில் அறிவிப்பு அளித்துள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார்.

சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வெங்கடேசன் ராணி வெங்கடேசன் தம்பதிக்கு மகளாக நவம்பர் 15, 1969 ஆம் ஆண்டு பீலா பிறந்தார். இவருடைய தந்தை எல். என். வெங்கடேசனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். வெங்கடேசன் யார் என்று பார்த்தால், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக (டிஜிபி) பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராணி வெங்கடேசன், இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆகும். ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் .

பீலா பள்ளிப்படிப்பை முடித்த பன்னர் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆனார், அதன்பின்னரே யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஏஸ் அதிகாரியாக மாறினார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பீலா, ஒடிசாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் அவர் பெயர் பீலா ராஜேஷ் என்று மாறியது.

செங்கல்பட்டு துணை ஆட்சியாராக இருந்த அவர், அதன்பின்னர் தமிழக அரசு துறைகளில் பல்வேறு பணிகளை வகித்து பணியாற்றினார். மீன்வளத்துறையின் திட்ட இயக்குனராக இருந்துள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக பணியாற்றி இருக்கிறார். இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனராகவும் பீலா பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கொரோனா காலத்தில் பீலா ராஜேஷ் பணி பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பரில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ், எரிசக்திதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று மாற்றி உள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு பின் மாற்றி உள்ளார். இதேபோல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பீலா என்று மட்டுமே வைத்துள்ளார். திடீரென பெயரை மாற்றியது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

காவல்துறையைச் சேர்ந்த பெண் கண்காணிப்பாளர் ஒருவர், டி.ஜி.பி பொறுப்பில் உள்ள ராஜேஷ் தாஸ் மீது கொடுத்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸும் சென்றிருக்கிறார். அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம், ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியால் பெயரை மாற்றினாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தவிர, வேறு காரணம் ஏதும் இருக்குமா? என புலானாய்வு புலிகளும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal