வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெல்லும் என கருத்துக்கணிப்பு வெளியாகி பா.ஜ.க. & அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவின் வெற்றிக்கு தடைப்போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்பட மொத்தம் 28 கட்சிகள் இணைந்துள்ளன.

‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் தற்போது வரை 3 ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இந்நிலையில் தான் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தெலுங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மிசோராம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஜொலிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்க சில கட்சிகள் தயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ‘இந்தியா’ கூட்டணி கரைசேருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் தேசிய அரசியல் என்பது பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி என்ற அடிப்படையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் இணையாத கட்சிகளும் களத்தில் உள்ளன. தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி என்பது உருவாகலாம் என கூறப்படுகிறது. அதாவது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற அடிப்படையில் போட்டி என்பது நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் Democracy Times Network சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் தேர்தல் நடந்தால் வெற்றி பெறுவது யார்? என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி உள்ளன. இந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும் என இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த கூட்டணி 46 சதவீத ஓட்டுக்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக தற்போது சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு இடங்களும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 22 சதவீத ஓட்டுகளையும், பாஜக 8 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 24 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கணிப்பு எப்போது, எப்படி எத்தனை பேரிடம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்துக்கணிப்புகள் பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றது. அதே சமயம், கருத்துக்கணிப்புக்களை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. தற்போதைய சூழ்நிலையின் படி தி.மு.க. 40க்கு 40 இடங்களில் வெல்லும் சூழ்நிலை உறுதியாகிவிட்டது.

காரணம், அ.தி.மு.க.வில் ஒற்றுமையில்லை… வேட்பாளர் தேர்வில் குளறுபடி… தகுதியில்லாதவர்களிடம் ‘விட்டமினை’ பெற்றுக்கொண்டு வேட்பாளராக அறிவிப்பது… என ஏராளமான குளறுபடிகள் அ.தி.மு.க.வில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கனிசமாக முக்குலத்தோர் வாக்குகளை பிரித்துவிடுவார்கள். சிறுபான்மையினர் வாக்குகளும் அ.தி.மு.க.விற்கு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

அதே சமயம் அ.தி.மு.க.வில் மட்டும்தான் உட்கட்சி பூசல், உள்குத்து இருக்கிறதா? என்றால் இல்லை! அ.தி.மு.க.வை விட ஆளும் தி.மு.க.வில்தான் உட்கட்சிப் பூல், உள்குத்து ஆகியவை அதிகம் இருந்தாலும், கடைசி நேரத்தில்¢ கொடுக்கப்படும் ‘இனிப்பு’ அனைவரின் மனதை மாற்றி, 40 இடங்களிலும் தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதுதான் தற்போதைய நிலைமை!’’ என்றனர்.

எனவே எடப்பாடி பழனிசாமி அவர்கள், மிகுந்த கவனம் செலுத்தனி£ல் தவிர, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை! எனவே, தேர்தல் வியூகம், கூட்டணி வியூகத்தை எடப்பாடி பழனிசாமி மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் ‘அரசியல் பார்வையாளர்களின்’ கருத்தாக உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal