‘கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா? எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள்’ என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மசூத். இவரது மனைவி சௌவுமியா. இவருக்கு டிசம்பர் 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதால் அவர்களால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்காததால் பெரும் போராட்டத்துக்கு பிறகு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தையின் உடல் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. அவரது சௌவுமியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குழந்தையின் உடல் முறையாக துணி ஏதும் சுற்றாமலும் அட்டை பெட்டியில் வைத்து அவரது தந்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிரேத பரிசோதனை கூடத்தின் ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- சென்னையில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்…தமிழக சுகாதாரத் துறையின் கருப்பு நாள்! வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 5-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வெள்ளத்தின் நடுவே தட்டுத்தடுமாறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

பெண் குழந்தை பிறந்து இறந்த கொடுமைக்கு நடுவே, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2500 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் உடலை சரியான முறையில் மூடப்படாமல் மருத்துவ அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் கொடுத்திருக்கிறார்கள்.

“கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா?” எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்ற தவறி விட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ‘தமிழக சுகாதாரத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது’ என தொடர்ந்து ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டி வருகிறோம். இதோ, மற்றுமோர் உதாரணம் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal