மிச்சாங் புயல் காரணமாக பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆரணி
ஆறு உடைந்தது. புயல் காற்று மழையால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, பருப்பு, போர்வை ஆகியவற்றை வழங்கினர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் பழவேற்காட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

53 மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணூரில் எண்ணெய் கசிவு தொடர்பாக துறை அமைச்சர் ஆய்வு செய்வார். அது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்று முடிவடையும். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், மிச்சாங் புயலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு
மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகர், டிஜே.கோவிந்த ராஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal