சென்னையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் வெள்ள பாதித்த அடுத்த இரண்டொரு நாட்களில் தண்ணீர் வடிந்து விடும். ஆனால் இந்த முறை வெள்ள நீர் வடியவில்லை. மெதுவாக உள்வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிய 4 நாட்களுக்கு மேல் நீடித்தது.
ஆனால் இந்த முறை வெள்ள நீர் வடியவில்லை. மெதுவாக உள்வாங்கியது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிய 4 நாட்களுக்கு மேல் நீடித்தது.
சென்னையின் முக்கிய நகரப் பகுதிகள் முதல் புதிதாக உருவான பகுதிகள் வரை வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ள நீர் வடிந்து வந்த பகுதிகளில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. ஒவ்வொரு தெருக்களிலும், வீதிகளிலும் சகதிகள் தேங்கி கிடக்கின்றன. வீடுகளில் தேங்கிய சகதியை சுத்தம் செய்வதற்கே பெரும்பாடாக உள்ளது. வெள்ளம் புகுந்த சாலைகளில் சேரும் சகதியும் காணப்படுகிறது. மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து வெள்ளமாக புரண்டு ஓடியதால் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க குப்பைகள் ஒவ்வொரு பகுதியிலும் மலை போல் குவிந்துள்ளன. அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அப்பகுதி மக்கள் கொட்டினர். 4 நாட்களாக குப்பை எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்ற பணிகளுக்கு சென்றதால் சென்னை நகர் முழுவதும் வீதிகளில் குப்பை மேடுகள் புதிதாக உருவாகி உள்ளன. வீடுகளில் தேங்கிய குப்பைகளை மக்கள் வெளியே கொண்டு வந்து கொட்ட முடியாமல் முடங்கியதால் மூட்டை மூட்டையாக குப்பை சேர்ந்தன. பிளாஸ்டிக் பைகளிலும், பயணற்ற பைகளை சேகரித்து வைத்த குப்பைகளை ஊழியர்கள் வராததால் தெரு வீதிகளில் கொட்டினர்.
சென்னையில் 15 மண்டலங்களிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. திடீரென உருவான குப்பை மேடுகளில் நாய்களும், மாடுகளும் கிண்டி கிளறி வருகின்றன. உணவில்லாமல் தவித்த விலங்குகள் குப்பைகளில் கிடக்கும் உணவு கழிவுகளை சாப்பிடுவதற்கு அதனை தெரு வீதி முழுவதும் தள்ளி விடுகின்றன. இதனால் சென்னை நகரமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக குப்பைகளை அள்ளினாலும் குவிந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் அதிக குப்பை மற்றும் சகதிகள் சேர்ந்து இருப்பதால் அவற்றை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
11,700 தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டத்தில் இருந்து 2,256 சுகாதார பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் மற்றும் நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நோய் கிருமி பரவாமல் தடுக்கும் வகையில் சாலைகள், தெரு வீதிகளில் உள்ள சாக்கடை, சகதி கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டால்தான் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.