சென்னை மாநகர் மற்றும் புறநகரை ‘மிக்ஜாம்’ புயல் புரட்டிப்போட்டது. சென்னை மாநகரில் மழை நின்றவுடன் மின்விநியோகம் உடனடியாக சீரானது. காரணம், கடந்தாண்டு மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி எடுத்த புதிய முயற்சிதான் வெள்ள பாதிப்பில் பேருதவி புரிந்திருக்கிறது.

சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த அளவுக்கு மழை அப்போது இல்லாவிட்டாலும், மழைநீர் வடிகால்கள் சீரமைக்கும் பணி முடிவடையாததன் காரணமாகவே அதிகமாக மழைநீர் தேங்கியது. மேலும், மின்சார விநியோகம் பெரும்பாலான இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சார வாரியத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

அப்போது, மின்சார வாரியம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்தார். மழைநீர் தேங்கியதால், சேதமடைந்த பில்லர் பாக்ஸ்கள் கண்டறியப்பட்டன.

மேலும், சென்னையில் எங்கெல்லாம் மின் விநியோகப் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்) தாழ்வாக இருக்கிறதோ அதெல்லாம் கணக்கெடுக்கப்பட்டது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் தாழ்வாகவே இருந்தன. இதையடுத்து, உடனடியாக, தாழ்வாக இருந்த பில்லர் பாக்ஸ் அனைத்தும் ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டன.

இப்படியாக, சென்னையில், 4,658 பில்லர் பாக்ஸ், தரையில் இருந்து 1 மீட்டர் உயர்த்தப்பட்டன. சென்னை மற்றும் புறநகருக்கு, 240 துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும், 1,877 மின் வழித்தடங்கள் வாயிலாக, 41,311 டிரான்ஸ்பார்மர்கள் உதவியுடன் மின் வினநியோகம் செய்யப்படுகிறது. தாழ்வான இடங்களில் இருந்த, 4,658 ‘பில்லர் பாக்ஸ்’ எனப்படும் மின் விநியோக பெட்டிகளின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டது. தண்ணீர் தேங்கும் இடங்களில் இருக்கும் துணைமின் நிலையங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டது.

கன மழை, புயலின் போது டிரான்ஸ்பார்மர் அல்லது வழித்தடத்தில் பழுது ஏற்பட்டால், உடனே மாற்று வழித்தடம் வாயிலாக தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த மழைக் காலத்துக்கு முன்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பில்லர் பெட்டிகளும் ஒரு மீட்டர் உயர்த்தப்படும். இதனால், மழைநீர் சூழ்ந்தாலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

அதன்படி, சென்னை நகர் முழுவதும் பில்லர் பாக்ஸ்களின் உயரம் அதிகரிக்கப்பட்டதால், கடந்த மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது, சென்னையில் பெய்த பெருமழையின்போது தேவையற்ற மின்வெட்டு தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டு சென்னை மழையில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய மழையில், சென்னை நகரமே மழைநீரில் மிதந்த நிலையிலும், மின்சார டிரான்ஸ்பார்கள், பில்லர் பாக்ஸ்களுக்கு அதிகம் சேதம் ஏற்படவில்லை. மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், மழை ஓய்ந்து, மழைநீர் வற்றிய பகுதிகளுக்கு உடனடியாக, மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நள்ளிநவில் மழை குறைந்ததால் சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மழை நின்ற அடுத்த 2 மணி நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். அதன்படியே, புயல் சென்னையை விட்டு விலகிய நிலையில் சென்னையில் மழை குறைந்ததும், நள்ளிரவில் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மழைநீர் அகற்றப்பட்ட பகுதிகளை ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் சென்னையில் சுமார் 80% இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது. சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். மழை நீர் வடியாத இடங்களில் மட்டுமே மின்சார விநியோகம் தாமதப்படும் மற்ற இடங்களில் வெகு விரைவில் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும், அவர் மின்வாரியத்துறைக்கு அமைச்சராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal