அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு வந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல்களின் முடிவுகளுக்குப் பிறகு ‘இணைந்தாலும்’ ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று அரசியல் பார்வையாளர் சவுக்கு சங்கர் உள்பட பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமியை ‘மாற்றி’ யோசிக்கும் படி கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்களாம்.

இது பற்றி தமிழக அரசியல் களத்தை உற்றுநோக்கி வரும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்,

‘‘சார், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய அதிமுக மக்களவைத் தேர்தலிலும் சரி, அடுத்து வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் சரி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவித்தது. அதிமுகவின் முடிவுக்கு சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஆதரவு உருவாகியது. இஸ்லாமிய அமைப்புகள் சில எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தன. கிறிஸ்தவ அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

தமிழக அரசியலில் அதிமுக கிராமம் முதல் நகரம் வரை தொண்டர் கூட்டத்தை வைத்துள்ள பலமான கட்சி. இருப்பினும் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதால் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை அக்கட்சி 2019 தேர்தல் முதல் இழந்து வந்துள்ளது. பாஜக கூட்டணியை முறித்ததன் மூலம் அந்த வாக்குகள் மீண்டும் வரும் என்று கணக்கு போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு கட்சியில் அவருக்கு நெருக்கமாக உள்ள சில மாஜி அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. இதனால் தேர்தலில் பாஜகவால் வாக்குகள் அடிப்படையில் நமக்கு பலன் இல்லை. சில இடங்களில் அவை எதிர்பலனைக் கூட கொடுத்திருக்கலாம், மறுப்பதற்கில்லை.

அதேசமயம் இந்த முடிவை நாம் எடுக்க வேண்டியது சட்டமன்றத் தேர்தலில் தான். மக்களவைத் தேர்தல் நமக்கானது அல்ல. தமிழகத்தில் எப்படியோ ஆனால் பிற மாநிலங்களில் பாஜகவுக்கு இன்னும் சாதகமாக தேர்தல் முடிவுகள் வருவதாக சொல்கிறார்கள். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளே அதைக் காட்டுகின்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளை சற்று உற்றுநோக்கினால் பாஜகவுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பாஜக வெற்றி பெற்ற மாநிலங்கள் எல்லாம் பெரிய மாநிலங்கள். அதிக வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் கூட பாஜகவும் தனது சீட் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. நிலைமை இப்படியிருக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கூட்டணியில் இருந்தால் அது நமக்கு சாதகமாக அமையும். ஒருவேளை நாம் கூட்டணியில் இல்லை என்றால் பாஜகவின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும்.

அதுமட்டுமல்லாமல் மக்களவைத் தேர்தல் என்பதால் நம்முடன் இருந்த சில கட்சிகள் பாஜக பக்கம் செல்வதா, நம் பக்கம் இருப்பதா என்ற குழப்பத்தில் உள்ளன. மக்களவைத் தேர்தல் என்பதால் அந்த பக்கம் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே பாஜகவுடனான கூட்டணி விஷயத்தில் வீம்பு பிடிக்காமல் எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.

திமுக பக்கம் போகும் ரெய்டுகள் நம் பக்கம் திரும்பாது என்று கூறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’’ என்று மாஜிக்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் மந்திரம் ஓதியிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றியோசிக்கும் நேரம் வந்துவிட்டதோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal