அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்திருக்கிறார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டிருக்கிறார். இந்த பேரம் ரூ.51 லட்சத்தில் முடிந்திருக்கிறது. முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை அங்கித் பெற்றிருக்கிறார். இரண்டாவது கட்டமாக ரூ.31 லட்சத்தை கொடுக்குமாறு தொடர்ந்து சுரேஷ் பாபுவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அங்கித். இதனையடுத்து சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை அங்கித் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், பிரதமர் அலுவலகத்திலிருந்து சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்க உத்தரவு வந்துள்ளதாக கூறிதான் அங்கித் திவாரி லஞ்சம் பெற்றிருக்கிறார்.

மட்டுமல்லாது, பேரம் பேசும்போது தனது உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து லஞ்ச தொகையை குறைப்பதாகவும் அங்கித் கூறியிருக்கிறார். இவை அனைத்தும், அங்கித் திவாரியின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு எழுப்பியிருக்கிறது. எனவே நேற்றிரவு அதிரடியாக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.

சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் நடவடிக்கைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது, “ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பாஜக, வருமான வரித்துறை பாஜக என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக என குறிப்பிடலாமா?

தமிழகத்தில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே, எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா? அதுபோலதான் இதுவும். அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்த துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்த துறையே கறை படிந்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்?

அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில் இந்த துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்பு துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம். தமிழக அரசு தவறான முன்னுதாரணத்தை எடுத்து சென்றுக்கொண்டிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal