தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு, மெச்சூரிட்டி குறைவான அரியல்வாதிகளை வைத்து தான் தமிழக மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இது தமிழர்களின் சாபக்கேடு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமலாக்கத்துறையில் லஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனி மனிதர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையையும் குற்றம் சுமத்த முடியாது. மேலும் அமலாக்கத்துறையில் இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே வேறுசில மாநிலங்களில் அதிகாரிகள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரி மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. அதனை துறை ரீதியாக மட்டுமே அணுக வேண்டும். அமலாக்கத்துறையில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு சிலர் பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசுகின்றனர். பொதுவாக தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு. மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளை வைத்து தான் தமிழக மக்களும் வாழந்து வருகின்றனர். இது தமிழர்களின் சாபக்கேடு. இதற்கு 2024, 2026ல் பாரதிய ஜனதா கட்சி இதற்கு ஒரு முடிவு கட்டும்.

சென்னை மழையை பொறுத்தவரையில் தற்போது நடப்பது ஒன்றும் புதிது கிடையாது. கலைஞர் கருணாநிதி காலத்திலும் வேட்டியை மடித்துக் கொண்டு தேங்கிய நீரை பார்வையிட்டார், ஸ்டாலினும் வேட்டியை மடித்துக் கொண்டு மழை நீரை பார்வையிட்டார், அமைச்சர் உதயநிதியும் பேண்ட்டை தூக்கிக் கொண்டு மழை நீரை பார்வையிடுகிறார். அவரது மகனும் இப்படி தான் செய்வார். சென்னையை அவர்கள் பார்க்கின்ற கோணமே வேறு. அவசர கதியில் ஏதோ ஒன்றை செய்தால் சரியாகிவிடும் என நினைக்கின்றனர்.

4 ஆயிரம் கோடி செலவில் பணி செய்துள்ளதாக திமுக அரசு சொல்கிறது. ஆனால் திரும்பி பார்த்தால் சாதாரண மழைக்குக் கூட தாங்காத நிலை தான் உள்ளது. சாதாரண மழைக்கே சாக்கடை கழிவுகள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடையும் நிலை உள்ளது. தமிழகத்தை இதற்கு முன்னர் ஆட்சி செய்த கட்சிகள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தனர். இவர்களால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இயலாது.

சென்னை மழை வெள்ளத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றால் உலகலாவிய நிபுணர்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதனை இவர்கள் செய்ய மாட்டார்கள் என்று விமர்சித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal