தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் வேளையில், லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக போலீசார் ‘அமுக்கிய’ விவகாரம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் இன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான தனிப்படையினர் அங்கிட் திவாரியின் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அவரது காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் கைப்பற்றினர். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் நிலையில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.