ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தில் 73.71 சதவீத வாக்குகள் பதிவானதான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. அதில், 4 கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவும், 4 கருத்துக்கணிப்புகள் நெருக்கமான போட்டி நிலவும் எனவும் கணித்துள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட துல்லியமாக கணித்திருந்த சி-வோட்டர், இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கணித்துள்ளது.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநில தேர்தலில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மக்களின் விருப்பங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் நெருங்கிய போட்டி இல்லை. பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மீதுள்ள அன்பும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்திகளும், கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பும், மாநிலத்தின் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியும் பாஜகவுக்குச் சாதகமாக உள்ளன.” என்றார்.
அதேபோல், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் வேட்பாளராக அறியப்படுபவருமான கமல்நாத் கூறுகையில், “ஒரு நாடு தொலைநோக்குப் பார்வையால் இயங்குகிறது, தொலைக்காட்சியால் அல்ல என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். எங்கள் கட்சி தொண்டர்களின் கடின உழைப்பால் உருவான காங்கிரஸுக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். கருத்துக் கணிப்புகளால் உங்கள் கவனத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதீர்கள்.” என தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2003, 2008, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்திருந்தது. 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு சென்றதால் ஒன்றரை ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து, பாஜக ஆட்சி அமைந்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார்.