அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு இதற்கு முன்பு 3 முறை விசாரித்திருந்தது.
மேலும் இரு தரப்பிலும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து இறுதியாக இன்று விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை வழக்கு நீதிபதி பீலா எம்.திரிவேதி முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது விசாரணை தொடங்கியதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே இந்த மனு வேறு நீதிபதியிடம் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அது உங்கள் முன் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இதை விசாரிக்கக் கூடாது. நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சுந்தரம் ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி பீலா எம்.திரிவேதி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றால் என்ன தவறு என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வு, எடப்பாடி பழனிசாமி மீதான மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்து அவர் இந்த மனுவை விசாரிக்கும் அமர்வு குறித்து முடிவு செய்வார் என்று கூறி இது குறித்த மனுவை அவருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.