தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

அதேசமயம், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, கடந்த சில நாட்களாக விஜயகாந்த் தொடர் இருமல், காய்ச்சல், சளி, தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ‘‘விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை’’ எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது எனவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal