அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டு வரை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜெயிலில் இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தபோது அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் நடந்தது. எனவே இருதயம் தொடர்பான உயர் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருதயவியல் துறை தலைவர் டாக்டர்மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். செந்தில்பாலாஜிக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது தெரிய வந்தது. மேலும் உடல் சோர்வும் இருந்தது.

ஜெயிலில் சரியான தூக்கம் இல்லாமல் தவித்ததால் ரத்த அழுத்தம் அதிகரித்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் குடல் புண் இருந்ததும் தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் நேற்றே தொடங்கினார்கள். இன்று காலையில் உணவுக்கு முன்பு நடத்தப்பட வேண்டிய பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் காலை உணவை முடித்த பிறகு முழு உடலுக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை கரைப்பதற்கான சிகிச்சையையும் டாக்டர்கள் தொடங்கி உள்ளார்கள். இதுவரை எடுக்கப்பட்டுள்ள அனைத்து பரிசோதனை முடிவுகளும் இன்று மாலைக்குள் வந்து விடும். அதை பார்த்த பிறகுதான் அவர் இன்னும் எத்தனை நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal