சாதாரண கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய எ.வ.வேலு, அ.தி.மு.க., தி.மு.க. கோலோச்சி எம்.எல்.ஏ, மந்திரி, கல்வித் தந்தை என பன்முகங்களை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்தவர்தான் எ.வ.வேலு! இன்று தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வதோடு, ‘பசையுள்ள’ துறைகளை தன்வசம் வைத்திருக்கிறார்!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்காவில் உள்ள சே.கூடலூர் கிராமத்தில் பிறந்தவர் எ.வ.வேலு. இவரது பிறந்த தேதி 1951ஆம் ஆண்டு மார்ச் 15. இவருடைய தற்போதைய வயது 72. திமுகவில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தவர். முதலில் பம்பு செட் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் தான் தண்டராம்பட்டு தாலுக்காவில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸ் நிறுவனத்தில் சேர்கிறார். அங்கு அவருக்கு கிடைத்தது கண்டக்டர் வேலை. இங்கிருந்து தான் நிலையான வருமானம் கிடைக்க ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் திமுகவில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்குகிறார். 1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட போது, அதில் எ.வ.வேலு இணைந்து கொள்கிறார். கட்சியில் சேர்ந்ததும் ஏதேனும் ஒரு பதவியை பெற வேண்டும் என்று காய் நகர்த்துகிறார். அதன்படி, தண்டராம்பட்டு ஒன்றிய துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது. இங்கிருந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டுகிறார். படிப்படியாக கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் உடன் இணக்கம் காட்டினார். இந்நிலையில் அதிமுக தனது முதல் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.

1977ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக களப்பணி ஆற்றுகின்றனர். இதற்கிடையில் தனது சொந்த தொகுதியான தண்டராம்பட்டுவில் சீட் வாங்கி எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்று எ.வ.வேலு விரும்புகிறார். இதற்காக அதிமுக தலைமை வரை பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் ஏ.ராமலிங்கத்திற்கு சீட் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறார். இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்று கருதி, பெரிய தலைவர் யாராவது ஒருவரிடம் நெருக்கம் காட்ட முடிவு செய்கிறார்.

அதன்படி, அப்போதைய அதிமுக அமைச்சர் ப.உ.சண்முகத்திடம் உதவியாளராக சேர்கிறார். இவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தான். இதையடுத்து 1984 சட்டமன்ற தேர்தல் வருகிறது. அப்போது தண்டராம்பட்டு சீட் வேண்டும் என்று எ.வ.வேலு முயற்சிக்கிறார். ஆனால் கட்சி தலைமை சற்றே யோசித்தது. உடனே அமைச்சர் ப.உ.சண்முகம் சிபாரிசு செய்ததை அடுத்து சீட் உறுதியாகிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் சிறிய அளவில் செல்வாக்கு பெற்றிருந்தவர், தனது பேச்சு திறமையால் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கிறார். இதற்கு பலனாக எம்.எல்.ஏ பதவியும் கிடைக்கிறது.

திமுக வேட்பாளர் டி.வேணுகோபாலை விட 18 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 33 வயதில் எ.வ.வேலு முதல்முறை எம்.எல்.ஏ ஆகிறார். அடுத்த தேர்தலுக்குள் எம்.ஜி.ஆர் மறைந்து விடுகிறார். அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிகிறது. அதில் ஜானகி அணி பக்கம் தாவுகிறார். அதன்பிறகு நடந்த அதிரடி மாற்றங்களால் ஜெயலலிதா கையில் கட்சி வருகிறது. இனிமேல் அதிமுகவில் இருந்தால் சரிவராது என்று கருதி வெளியேறி வருகிறார். இடையில் சிறிய கட்சிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக காலம் நகர்த்துகிறார். ஆனால் எதுவும் நிலையான அரசியல் வாழ்க்கையை தரவில்லை.

இதற்கிடையில் ஏராளமான கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வித் தந்தை ஆகிவிடுகிறார். சில படங்களையும் தயாரித்த நிகழ்வுகள் உண்டு. இந்நிலையில் தான் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவில் இணைய விரும்பினார். ஆனால் திருவண்ணாமலை வட்டாரத்தில் திமுகவிற்கு எ.வ.வேலு கொடுத்த குடைச்சல் எக்கச்சக்கம். இதனால் இவரை சேர்த்து கொள்ள திமுக தலைமை யோசிக்கிறது. உட்கட்சி பூசலாக வெடிக்க வாய்ப்பு ஏற்படும் என தயங்குகிறது.

ஆனால் திமுக அமைச்சராக இருந்த மாதவன் மூலம் காய் நகர்த்தி 1997ஆம் ஆண்டு அக்கட்சியில் இணைந்து விடுகிறார். கட்சிக்காக தாராளமாக செலவு செய்யும் வழக்கம் திமுகவின் மூத்த தலைவர்களின் கவனத்தை பெற்று தருகிறது. ஒருகட்டத்தில் கருணாநிதி வரை பிரபலமான நபராக மாறிவிடுகிறார். இந்த சூழலில் 2001ஆம் ஆண்டு தண்டராம்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. இதில் பெறும் வெற்றியானது திமுகவில் அடுத்தகட்ட தலைவராகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

பின்னர் நடந்த உட்கட்சி தேர்தலில் திருவண்ணாமலை திமுக மாவட்ட செயலாளராகவும் பதவி கிடைத்து விடுகிறது. 2006 சட்டமன்ற தேர்தல் எ.வ.வேலு உணவுத்துறை அமைச்சராகும் வாய்ப்பை பெற்று தருகிறது. இங்கிருந்து இவரது அரசியல் செல்வாக்கு வேற லெவலுக்கு சென்றதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர். பல சீனியர் தலைவர்களை ஓரங்கட்டியதோடு, பொருளாதார ரீதியாகவும் பெரிதாக வளர்கிறார். ஸ்டாலின் நட்பு வட்டாரத்தில் முக்கியமான நபர்களில் ஒருவராக எ.வ.வேலு இடம்பிடித்து விடுகிறார். தற்போதைய திமுகவிலும் தலைமைக்கு மிக நெருக்கமாக நபராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையல்தான் எ.வ.வேலுவை வருமான வரித்துறை வளைத்திருக்கிறது. ஏற்கனவே, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி சிறைசென்றவர்களின் நிலையை கண்கூடாக பார்த்து வருகிறோம். அ-டுத்து எ.வ.வேலுக்கும் அந்த நிலை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். காரணம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக் விட்டமின்களை இறக்க ஆயத்தமாகி வந்த நிலையில்தான் இந்த ரெய்டு என்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal