நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிசம்பர் மாதம் முதல் வாரம் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில்பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.525 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பாம்பன் பாலத்தின் ஒரு பகுதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க சுமார் 2,100 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த ராக்கெட் ஏவுளத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணிகள் குறித்தும் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசுவார் என எதிர்பாக்கப்படுகிறது. இருப்பினும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசு தரப்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இது பற்றி மேலிட வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஐந்து மாநில தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். டிசம்பர் முதல்வாரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், இன்னும் இரண்டு, மூன்று முறை மோடி தமிழக வர இருக்கிறார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை குறித்து விளக்கிப் பேசுவதோடு, பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க இருக்கிறார். இது தமிழக பி.ஜே.பி.யினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal