எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டு முத்தரையர் சமுதாயத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வையே ஆதரித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குமுறல் மத்திய மாவட்டங்களைத் தாண்டி, வடமாட்டங்களிலும் எழுந்திருக்கிறது.

இது பற்றி திருவள்ளூர், வேலுர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வசிக்கும் முத்தரையர் சமுதாயத்தினர் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், நாங்கள் காலம் காலமாக அ.தி.மு.க.வில்தான் இருந்துவருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியையே பின்பற்றி நடந்து வருகிறோம். தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழியில் பயணித்து வருகிறோம்.

குறிப்பாக திருவள்ளூர், திருத்தணி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், பொன்னேரி, கடலூர் விக்கிரவாண்டி, விழுப்புரம் உள்பட 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தரையர் வாக்குகள் உள்ளன. மேலும் ஆற்காடு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட சென்னை புறநகர்ப்பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தரையர் வாக்குகள் உள்ளன.

ஆனால், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் ஒரு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்குக்கூட மாவட்டச் செயலாளர் பதவியோ, மாநில அளவிலான பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் முத்துராஜா, முத்தரையரில் ஆரம்பித்து, வடமாவட்டங்களில் பாளையகாரர், காவல்காரர், குருவிகார வளையர், அரையர் என தமிழகம் முழுவதிலும் 29 உட்பிரிவுகளில் வசித்து வருகின்றனர்.

எனவே, எம்.ஜி.ஆர். காலந்தொட்டு ஜெயலலிதா இருந்தது வரையிலும், தற்போது எடப்பாடி பழனிசாமி வழியிலும் செல்லும் வட்டமாவட்ட முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட எம்.எல்.ஏ., எம்.பி., சீட் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்திலும், வடமாட்டத்தைச் சேர்ந்த முத்தரையர்கள் புறக்கணிக்கப்பட்டால், நாங்கள் மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிடும். எனவே, அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்லும் எடப்பாடியார், வடமாவட்ட முத்தரையர் சமுதாயத்தினரை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பதவி கொடுத்து, அவர்களை அ.தி.மு.க.விலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி முத்தரையர் சமுதாயத்தினரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal