‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு எப்பொழுது வந்தாலும் வெடிகுண்டு கலாச்சாரமும், ரவுடியிசமும் தலைதூக்குகிறது’ என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,

‘‘ தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்திய குடியரசு தலைவர் வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது, பாதுகாப்பு குளறுபடி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிகிறது. திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த வெடிகுண்டு கலாச்சாரமும், ரௌடியிசமும் தலைதூக்குகிறது.

வருகிற ஜனவரி மாதம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி, எந்தெந்த தொகுதிகள் என தலைமை முடிவெடுக்கும். பொதுக்குழு கூடி விஜய பிரபாகரனுக்கு என்ன பொறுப்பு என்பதை தலைமை அறிவிக்கும். திராவிடம் பொய் என்பது தவறான விஷயம். திராவிடம் என்பது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் சேர்ந்தது தான். திராவிடம் இல்லை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ளது, 50 லட்சம் இல்லை, 50 கோடி கையெழுத்து வாங்கினாலும், நீட்டை ஒழிக்க முடியாது, அரசியல் ஆதாயத்திற்காக திமுக மாணவர்களை குழப்பி கொண்டிருக்கிறது. நீட் இல்லை எந்த தேர்வானாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள். நீட்டை எதிர்ப்பேன் என மாணவர்களை அரசியல் சுய லாபத்திற்காக, குறிப்பாக உதயநிதி மாணவர்களை குழப்பி வருகிறாரே தவிர, ஒன்றுமே இல்லை.

தமிழக மாணவர்கள் அறிவாளிகள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். எதற்கும் பலனில்லாத சனாதனத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதே போல ஜாதி வாரி கணக்கெடுப்பு, மதத்தை பற்றி பேசுவது என்பதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இது அரசு செய்யும் தவறுகளை மக்கள் பேசக்கூடாது என்பதற்காக திசை திருப்பக் கூடிய வேலை.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவின் வாக்கு வங்கி உயரும், மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும். தமிழ்நாடு அரசு 20% போனஸை போக்குவரத்து அறிவித்துள்ளது. இதில் எந்த ஒரு போக்குவரத்து துறையைச் சார்ந்த ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் திருப்தி இல்லை. இதில் 30 அல்லது 40% உயர்த்தி தர வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இதனை தனியார்மயமாக்குவேன் என்று சொல்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது. தனியார்மயமானால் லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படும்’’ என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal