ஆரியம், திராவிடம் குறித்து ஆளுநர் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘அறிஞர்களிடம்தான் இது பற்றி கேட்கவேண்டும்’ என அசத்தலாக பதிலளித்திருக்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், இது ஒரு நாடகம் என்று திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. இப்போது பிரிவது போல பிரிந்துவிட்டு பின்னர், தேர்தல் முடிந்ததும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளும் என திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த பிரச்சாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஏற்கனவே பல முறை தெளிவாக சொல்லிட்டேன். பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இப்போது மட்டுமல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு பிறகு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுடன் அதிமுக நிச்சயம் கூட்டணி வைத்துக் கொள்ளாது. அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாங்கள் இனி தேர்தல்களை சந்திப்போம்.

ஆனால், திமுக இந்த விஷயத்தில் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை குழப்பி வருகிறது. பாஜகவுடன் அதிமுக மறுபடியும் கூட்டணி வைத்துவிடும் என்றும், நாங்கள் பாஜகவின் பி டீம் என்றும் கீழ்த்தரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அது உண்மை அல்ல. அதிமுக மேல் உள்ள பயத்தில் நடுங்கி இப்படியெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பொய்ச்சாமி, பொய்யர் என விமர்சித்திருந்த நிலையில் அதுகுறித்துப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நான் இதுவரை எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.” எனக் கூறியுள்ளார்.

மேலும், “ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார் உதயநிதி. ஆனால் இப்போது நாங்கள் என்ன செய்தோமோ அதைத்தான் மீண்டும் திருப்பித் திருப்பி செய்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சொல்வார்களா? 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குகிறார்களாம், அப்படி வாங்கி எங்கு கொண்டு போய் கொடுக்கப்போகிறார்? திமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முட்டையை மக்கள் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ஆரியம், திராவிடம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “இதுக்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை. திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு நான் சரியான நபர் அல்ல. தவறான பதில் கொடுத்து விடக்கூடாது. அறிஞர்களைப் பார்த்துத்தான் இதனை கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal