சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக போடப்பட்டுள்ள சாலைகளில் பள்ளம் தோண்டக்கூடாது என தலைமைச் செயலாளர் திடீர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் நிலை, சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

‘‘சென்னை மாநகராட்சியில் உள்ள 1670 சாலைகளில், மீதமுள்ள 255 சாலைகளில் நிரந்தரசாலை வெட்டு சீரமைப்பு பணிகளையும் மற்றும் 211 சாலைகளில் தற்காலிகசாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளையும் அக்.25-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் வண்டல் வடிகட்டி அமைக்கும் பணி, கட்டிடகழிவு அகற்றும் பணிகளை அக்.25-க்குள் முடிக்க வேண்டும். புதிதாக வண்டல் வடிகட்டி அமைக்க பள்ளங்கள் தோண்டக்கூடாது.

மேடவாக்கம் பிரதான சாலை யில் நீர்வளத்துறை மேற்கொண்டு வரும் பணிகளில் மழைநீரை அகற்ற அதிக திறன் கொண்ட பம்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். போரூர் சர்பிளஸ், நன்மங்கலம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில்இருந்து மழைநீர் வெளியேறும் இடங்களில் மழைநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது. பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வாகனங்கள் சீராக செல்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal