மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் தொடுத்த வழக்கில், ‘இரண்டு நிமிட இன்பத்திற்காக மைனர் பெண்கள் பாலியல் வழக்குகளில் சிக்குவது வேதனை அளிப்பதாக’ நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞன் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்த சாரதி சென் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தான் மைனர் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் பட்டியலை கொல்கத்தா ஐகோர்ட் வெளியிட்டது. மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பலாத்கார வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்த நபர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் மைனர் சிறுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவருடன் உடலுறவைக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான இவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. விசாரணையின் போது, சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பின்னர் அவரை திருமணமும் செய்து கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டப்படி பாலியல் உறவுக்கு ஒப்புதல் (age of consent) தெரிவிக்கும் வயதாக 18 இருக்கிறது. அதாவது ஒருமித்த உறவாக இருந்தாலும் பாட்னருக்கு குறைந்தபட்சம் 18 வயதாகி இருக்க வேண்டும். 18 வயதுக்குக் கீழ் இருக்கும் மைனர் பெண்கள் தரும் ஒப்புதல் சட்டப்படி செல்லுபடியாகும். எனவே, இந்தியாவில் 18 வயதுக்கு வயதுக்குக் குறைந்தோர் உடன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும்.
இந்தச் சட்டத்தின்படியே அந்த இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் விரிவான தீர்ப்பை வழங்கியது. இளம் வயதில் பாலியல் உறவுகளால் ஏற்படும் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கப் பள்ளிகளில் விரிவான பாலியல் கல்வி தேவை எனக் கொல்கத்தா ஐகோர்ட் தெரிவித்தது. இளம் பருவத்தினரிடையே உடலுறவு என்பது இயல்பானது.. அதேநேரம் அத்தகைய தூண்டுதலின் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஒவ்வொரு ஆண், பெண்ணை பொறுத்தது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பெண்கள் தங்கள் பாலியல் வேட்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்றம், இரண்டு நிமிட மகிழ்ச்சிக்கு இடமளிக்கக் கூடாது என்றும் கூறினர். இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில்,
“பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். வெறும் இரண்டு நிமிட பாலியல் இன்பத்தை அனுபவிக்க அந்தக் கட்டுப்பாட்டை இழந்தால்.. சமூகத்தின் பார்வையில் தோல்வி அடைந்தவராகவே கருதப்படுவார்கள். தனது உடலின் கண்ணியம் மற்றும் சுய மதிப்பைக் காக்கும் கடமை பெண்களுக்கு உள்ளது.
அதேபோல சிறுவர்களும் பெண்ணின் கண்ணியத்தை மதிக்க வேண்டும்.. பெண்களை மதிக்க நாம் ஆண்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு மைனர் பெண் அல்லது பெண்ணின் மேற்கூறிய கடமைகளுக்கு மதிப்பளிப்பது ஒரு ஆணின் கடமையாகும். இதற்காக நாம் பயிற்சிகளையும் அளிக்க வேண்டி இருக்கிறது” என்றார்.