நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிற்கு, தி.மு.க. பிரமுகர் ஒருவரே ‘வெடிகுண்டு’ மிரட்டல் விடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் திருச்சி தில்லைநகர் 5வது கிராஸில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகவும் கூறி இணைப்பை துண்டித்தார். இதனையடுத்து திருச்சி மாநகர போலீசார் உஷார் படுத்தப்பட்டு தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் மற்றும் மோப்ப நாய் சகிதம் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு எண்ணை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த எண் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்தனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போலீசார் அதில் பேசிய நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர், ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பதும், திருச்சி 62வது வார்டில் உள்ள திமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.
மணிகண்டனின் 9 மாத பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதுடன், ஒரு கிட்னி செயல்படவில்லை, செயல்பாட்டில் உள்ள மற்றொரு கிட்னியும் முழுமையாக செயல்படவில்லை. குழந்தை உயிரை காப்பாற்ற வாய்ப்பு குறைவு என்பதால் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் சேர்த்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவும் படி ஆளும் கட்சியான திமுக பிரமுகர்கள் பலரை சந்தித்து மணிகண்டன் உதவி கேட்டதாகவும், ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்து விட்டதாக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மணிகண்டன் வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து இத்தகவல் அமைச்சர் கே என் நேருவிற்கு தெரியவரவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் எனக் கூறி அவர் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை. பின்னர் ராமச்சந்திரனை போலீசார் விசாரணை வலையத்தில் இருந்து விடுவித்தனர். அமைச்சரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தகவல் இன்று காலை முதல் திமுகவினர் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது.