செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘மருத்து காரணங்களை சொல்லி ஜாமீன் தரமுடியாது’ என உத்தரவிட்ட நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீனுக்கு அப்பீல் செய்தபோது, ‘ஏன் இந்த அவசரம்?’ என சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் ராம் சங்கர், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி, சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதி, ‘‘ஏற்கெனவே விசாரிக்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. அதனால், இந்த வழக்கை நாளை (இன்று அக்டோபர் 20ம் தேதி) அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. மேலும், அடுத்த வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்சநீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி, இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’’ என்றார்.

இந்த மேல்முறையீட்டின்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த, அடுத்த சில மணி நேரத்திலேயே, இப்படி அப்பீல் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்து விட்டதால், ஆன்லைன் வழியாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான், ஜாமீன் கோரி விரைவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது என்று விளக்கம் தரப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, அமலாக்கத்துறை சார்பில் வக்கீல் முகேஷ் குமார் மரோரியா கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. காவல் நிறைவடைந்திருந்த நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக மீண்டும் அவரை காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதாலும், அவரது சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக இருப்பதாலும் உச்சநீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal