நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் காலத்தையொட்டி இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள காட்டேஜ்களில் தங்கி இருந்து இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசித்தும், மலைப்பாங்கான இடத்தில் சென்று யோகாசனம் செய்தும் வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு வருகை தருவார்கள்.

தற்போது இஸ்ரேல் நாட்டில் போர் பதட்டம் சூழ்ந்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் வருடம் தோறும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து தங்குவது வழக்கம். இவர்கள் முறையற்ற வகையில் தங்குவதை தடுக்க அவர்களது அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே அனுமதி அளிக்கப்படும்.

இதற்காக வட்டக்கானல் பகுதியில் சோதனைச்சாவடியும், கடந்த 5 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில இஸ்ரேலியர்கள் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர். மேலும் பலர் வர வாய்ப்புகள் இருந்தாலும் முறையான சோதனைக்கு பிறகே இங்கு தங்க வைக்கப்படுவார்கள். கொடைக்கானல் எல்லையான வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியிலும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பிரிவினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி வேறு யாரும் இங்கு அடைக்கலம் வராத அளவுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழியாக மோட்டார் சைக்கிள்களில் கடந்து செல்பவர்களையும் கண்காணித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal