பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கிய நிலையில், ‘பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்கிறோம்’ எனக்கூறி அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ஏ.சி.எஸ்.!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடரும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென கூட்டணியில் இருந்து விலகி பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து புதிய கூட்டணியை அமைக்க இருப்பதாகவும் அதிமுக அறிவித்தது. இந்தநிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாக, ஐஜேகே, புதிய தமிழகம், புதியநீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் என்ன முடிவெடுக்கும் எனஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தமாக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தேர்தல் நேரத்தில் தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறிவிட்டது. இதனையடுத்து ஐஜேக தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வருகிறது. பெரும்பாலும் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஐஜேக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எடுப்பார் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், இந்த முறையும் வேலூர் தொகுதியை குறிவைத்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்து கொண்ட ஏசி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
அதன் படி கடந்த 23 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் புதிய நீதிக்கட்சி பயணித்துக் கொண்டிருக்கிறது என கூறினார் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாக தெரிவித்தவர், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். கடந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க. விரும்பியதால், அந்த சின்னத்தில் போட்டியிட்டோமே தவிர வேறொன்றும் இல்லை என ஏசி சண்முகம் கூறினார்.