ஒரு பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் வல்லமை படைத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, எந்தவொரு கேள்வியையும் ‘லாவகமாக’ எதிர்கொள்வார் டி.டி.வி.தினகரன். ஆனால், அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் சகிப்புத்தன்மையை இழந்து எரிச்சலைடைந்து வருவதுதான் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர், பாஜக மாநில தலைவராக இல்லாமல் கட்சியில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்டவுடன் கோபடைந்த அண்ணாமலை செய்தியாளரை கேமரா முன் வாருங்கள் என ஆவேசமாக அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, “இவ்வளவு நேரமாக நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் சிஸ்டர். பாரதிய ஜனதா கட்சி தவறான பாதையில் போகிறது என்று யாராவது ஊடக நண்பர்களோ, அரசியல் விமர்சகர்களோ சொன்னார்கள் என்றால் அதற்கு நேர் எதிரான நிலைபாட்டைதான் தமிழ்நாடு பாஜக கட்சி எடுக்கும். அதான் தமிழ்நாடு பாஜக கட்சிக்கு நல்லது. நீங்கள் இடது பக்கம் போனால் நாங்கள் வலது பக்கம் போவோம். எல்லோருக்குமே தமிழ்நாடு பாஜக மீது கோபம்தானே.

பாஜகவுக்கு ஒரே ஒரு தேர்தல் தேவைப்படுகிறது. 25% வாக்கு வங்கியை பாஜக காட்டிவிட்டால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறும். தமிழ்நாட்டில் மேல்மட்டத்தில் என்ன கருத்து வைக்கிறார்களோ அதற்கு நேர் எதிரான நிலைபாட்டை எடுப்போம். இந்தியாவில் பாஜகதான் தூய்மையான கட்சி. எனவே அதன் மீது வெறுப்பு இருக்கத்தானே செய்யும்.” என்றார்.

அப்போதுதான் பெண் பத்திரிகையாளர், பாஜக மாநில தலைவராக இல்லாமல் கட்சியில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, “நீங்க வாங்க சிஸ்டர்.. இங்க வாங்க. பக்கத்துல வாங்க. கேட்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. இதுபோல் கேள்வி கேட்பவர்களை தமிழ்நாடு மக்கள் பார்க்க வேண்டும்.” என்றார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு சக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர், “நான் சொல்வதை கவனியுங்கள். நீங்கள் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவராக இல்லாவிட்டால் பாஜகவில் தொடர்வீர்களா? என்று கேட்கிறார். இந்த மாதிரி அறிவாளித்தனமாக கேள்வி கேட்பது யார் என்று எல்லோரும் பார்க்க வேண்டும். நான் சொல்வது என்ன தவறு.

அண்ணே.. கேள்விக்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபை தாண்டினால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விட மாட்டான். நான் என்ன இந்த சீட்டை பசை போட்டுள்ளேன். தயவு செய்து வாங்க சிஸ்டர்.” என்று அவர் அழைத்தவுடன் மீண்டும் செய்தியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது ஆவேசமடைந்த அண்ணாமலை, “ஒரு நிமிசம். இதை எப்படி நீங்கள் ஆதரிப்பீர்கள்? எங்கு சொன்னேன்?” என்று பல முறை செய்தியாளர்களிடம் கேட்டார். “இன்றைக்கும் நான் விவசாயம் செய்கிறேன்.

இன்றும் என்னுடைய முதல் பணி விவசாயம். நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது. நான் ஏன் முழுநேர அரசியல்வாதியாக இருக்க வேண்டும்? ஊழல் செய்யவா? கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது சிஸ்டர். நீங்கள் எல்லாம் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

தொழில்முறையாக நடந்துகொள்ள வேண்டும். தவறை தவறு என சொல்லுங்கள். சரியை சரி என்று சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் வர வேண்டும். அதான் என் ஆதங்கள். 40 வயதுக்கு பிறகு இந்த சேனல், அந்த சேனல் என அலையக் கூடாது.” என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இது பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘பொதுவாழ்வில் இருப்பவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்பது முதலில் தவறு! அதே சமயம், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சகிப்புத்தன்மையும் அவசியம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபப்பட்டு அடிக்கப் பாய்ந்ததெல்லாம் நடந்தது. இது சரியான முன்னுதாரணம் கிடையாது.

பாஜக மாநில தலைவராக இல்லாமல் கட்சியில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளிப்பதைவிட்டுவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலைக்கு முதலில் சகிப்புத் தன்மை தேவை’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal