பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் தோற்றால் மா.செ.க்களின் பதவி பறிக்கப்படும் என முதல்வரும், கட்சியின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம்தான் உள்ளது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.2) நியமிக்கப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் சரி பார்க்க வேண்டும். விறுப்பு, வெறுப்புகளை மறந்து கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றதை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள். தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாது பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

வருகிற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியே முக்கியம் என்கின்ற வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன்.

தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று பாராளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் அந்த மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தொகுதிப் பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள்’’ இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், இதற்கு முன்பு அ.தி.மு.க.வில்தான் வேட்பாளர்கள் தோற்றால் அதிரடியாக மா.செ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது ஜெ. பாணியை கையில் எடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

காரணம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மா.செ.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரை வேட்பாளராக தேர்வு செய்து மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதோடு, உதயநிதி ஸ்டாலின் தகுதியானவர்களையும், கட்சிக்காக உழைப்பவர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்து ஒரு லிஸ்டை கையில் வைத்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்த லிஸ்ட் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறது. அந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு முதல்வரே வியந்து போய்விட்டாரம். காரணம், மா.செ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கு இந்த முறை வாய்ப்பில்லையாம். இதனால், ஏதேனும் உள்குத்து நடந்து, சொந்தக் கட்சியினாராலேயே வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal