அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் உள்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவை’ அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் ஆந்திராவிற்கு சென்ற எடப்பாடியார் துர்க்கை அம்மன் மற்றும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

தமிழகத்தில் சுமார் 4 ஆண்டுகாலத்திற்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சையான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் எனவும், இதே போல 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் பாஜக இல்லாமல் எதிர்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி முறிவால் எந்தவித பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயார் எனவும் அறிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவிற்கு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா செல்லும் அவர், அங்குள்ள சக்தி வாய்ந்த பிரசக்திப் பெற்ற ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை தரிசித்தார்.

அதனை தொடர்ந்து, திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தப்பின் இன்று இரவே விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயவாடா நகரத்தில், கிருஷ்ணா நதியோரத்தில், இந்திரநீலாத்திரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள துர்கை அம்மன் ஆலயம், மிகவும் சக்தி வாய்ந்த கோவில் எனவும், வேண்டியவை நிறைவேறும் என ஆந்திர மாநில மக்களின் நம்பிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal