தமிழகத்தில் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்குமான இடையே ஏற்பட்ட பணிப்போர் தற்போது முற்றி வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில்தான் நாளை முக்கிய முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக பாஜக இடம்பெற்றிருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து சந்திக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக- பாஜக இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற நிலைப்பாட்டில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைந்த முதலமைச்சர் அண்ணா மற்றும், ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியது மேலும் மோதலை அதிகரித்தது. இதனையடுத்து அதிமுகவினர் அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்தனர். இந்த கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது.

இதனையடுத்து இரு தரப்பையும் சமானதனம் செய்யும் முயற்சி நடைபெற்றது. அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமையை சந்திக்க டெல்லி சென்றனர். ஆனால் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவரை சந்திக்க முடியாமல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மட்டும் சந்தித்து தங்களது புகாரை தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தங்கமணி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக விவரித்தார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் தமிழக முழுதும் உள்ள மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லையென அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டம் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இது பற்றி மூத்த தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், எடப்பாடியாருக்கு மடியில் கணமிருப்பதால் வழியில் பயந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் அ.தி.மு.க. தயவில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கும் பா.ஜ.க.விற்கு எடப்பாடி பழனிசாமி இந்நேரம் சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தால் அ.தி.மு.க.வை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிட்டு, பா.ஜ.க.வை முன்னிலைப் படுத்தும் வேலையில் அண்ணாமலை இறங்குவார். எனவே, இனி ஒரு போதும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வை கழற்றி விடவேண்டும்’’ என்றனர்.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற போது மூன்று மாதத்தில் ஆட்சி கலைந்துவிடும் என்றார்கள். ஆனால், தனது திறமையாலும் சாதுர்யத்தாலும், ஆட்சியை முழுமையாக நிறைவு செய்ததோடு, வலுவான எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது.

எனவே, பா.ஜ.க.வுடனான கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் எதிர்காலம்… மாஜிக்களின் எதிர்காலம்… என அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். எடுத்தேன்… கவிழ்த்தேன்… என்று எடுத்தால், அரசியல் கட்சிக்கும் நல்லதல்ல! எடப்பாடி பழனிசாமிக்கும் நல்லதல்ல! எனவே, நாளைய கூட்டத்தில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் எடப்பாடி பழனிசாமி. அவ்வளவு எளிதில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளமாட்டார் எடப்பாடியார்’’ என்றனர்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்கிறதா பா.ஜ.க. என அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்புகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal