‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி ‘தனித்து’ போட்டியிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருப்பதுதான் தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” எனும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கம்யூ னிஸ்டு கட்சியினரும் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.

இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மட்டும் பிரதிநிதி பெயரை தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலை அமைப்பான பொலிட்பீரோ அமைப்பின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது.

அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ளது. அதன்படி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு எடுத்துள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட் டத்தில் பங்கேற்ற போதிலும் தொடர்ந்து இந்தியா கூட் டணியில் நீடிக்க இயலாது என்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் கூட்டணியில் நீடிக்க இயலாது’’ என்று தெரிவித்து உள்ளனர். டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒரு முடிவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர்.

அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர். கேரளாவில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர்.

எனவே அங்கு ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது. அதுபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுடன் சுமூகமான மனநிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பரம விரோதிகளாக பார்க்கிறார்கள். எனவே தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கும் கூட்டணி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தெரி வித்து உள்ளனர். சில மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது. எனவே மேலும் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதில் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இவற்றையும் ஆய்வு செய்து இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த தலைவர் பிரகாஷ்காரத் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- ‘‘இந்தியா கூட்டணியில் அடிப்படை புரிதல் வேண்டும். அது இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மேற்கொள்ளாது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதற் கேற்ப கூட்டணி அமைப்பதும், தொகுதி பங்கீடு செய்வதும் முடிவு செய்யப்படும்’’ இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விலகி செல்வது உறுதியாகி இருக்கிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி.யும், பொலிட் பீரோ உறுப்பினருமான நிலோத்பல் பாசு கூறியிருப்பதாவது:-

‘‘இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டால் ஓட்டுகள் சிதறி விடும். ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம். கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தனித்து போட்டியிடும் முடிவை திட்டவட்டமாக சொல்லி விட்டோம். எனவே தேசிய அளவில் தொகுதி பங்கீடு செய்து கொள்ளமாட்டோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்துள்ள முடிவை காங்கிரஸ் தலை வர்களிடமும், மற்ற கூட் டணி கட்சி தலைவர்களிடமும் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதி நியமனம் செய்யமாட்டாது என்றும் எதிர்க்கட்சிகளிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal