சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-
நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது. இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார். திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.