தி.மு.க. அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது மேல் முறையீடு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் இல்லை என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், டெண்டர் முறைகேடு தொடர்பாக புதிய விசாரணை தேவையில்லை. ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் மாற்றத்தைத் காரணம் காட்டி மீண்டும் விசாரிக்க கோர முடியாது என்று உத்தரவிட்டு மீண்டும் விசாரிக்க கோரிய ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடும் விமர்சனம் வைத்திருந்த நிலையில், எடப்பாடி மீதான மேல் முறையீடு லஞ்ச ஒழப்புத்துறையின் ஒருசார்பு செயல்பாட்டை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal