அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட, செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக கூட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பது குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்கிறார்கள். இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘எனக்கு தெரிந்த வரை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடக்க உள்ளது. டெல்லியில் இருந்து எனக்கு வந்த தகவல் இது.

டெல்லியில் உள்ளவர்கள் சொன்னபடி பார்த்தால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் எப்போது நடந்தாலும் அதற்கு தயாராக இருங்கள். இதுதான் மிக முக்கியம்’’என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதில் பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்கிறார்கள்.

அதன்படி லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சில மாநில தேர்தல்களோடு சேர்த்து நடத்தவும், இதன் மூலம் ஒரே நாடு தேர்தல் முறையை கொண்டு வரவும் பாஜக முயல்வதாக கூறப்படுகிறது. அதாவது இந்த வருட இறுதியிலேயே லோக்சபா தேர்தல் வரலாம் என்கிறார்கள். பல மாநில தேர்தல்களோடு சேர்ந்து இந்த தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில்தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார். இதற்கான காரணங்களும் உண்டு.

அதாவது, பல மாநில தேர்தல்களோடு சேர்த்து ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தலை நடத்தலாம். இதற்காக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடையும். இதை எல்லாம் சேர்த்து இந்த வருட இறுதியிலேயே முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.

அடுத்தது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

பின்வரும் மாநிலங்களில் சட்டசபை முடிவிற்கு வரும் தேதிகள் பின்வருமாறு: . மிசோரம்: டிசம்பர் 2023 2. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா: ஜனவரி 2024 3. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: ஜூன் 2024 4. ஹரியானா, மகாராஷ்டிரா: நவம்பர் 2024 5. ஜார்கண்ட்: டிசம்பர் 2024 6. : பிப்ரவரி 2025 7. பீகார்: நவம்பர் 2025 8. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026 9. புதுச்சேரி: ஜூன் 2026 10.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027 11.உத்திரப் பிரதேசம்: மே 2027 12. குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027 13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028 14. கர்நாடகா: மே 2028 5. இந்த 10 மாநிலங்கள் டார்கெட் + லோக்சபா தேர்தல் இதுதான் பாஜகவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

தேசிய அளவில் மோடிக்கு பெரிய ஆதரவு உள்ள நிலையில் மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினாலும், மாநிலங்களிலும் பாஜக வெல்லும் என்று பாஜக தரப்பு கருதுகிறது. லோக்சபா தேர்தலில் ஓட்டு போடும் மக்கள் சட்டசபை தேர்தலிலும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பாஜக கருதுகிறது. இதுவே இந்த திட்டத்திற்கு காரணம்.

இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகத்திலும், தி.மு.க.வினர் திகைப்பிலும் உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal