‘சனாதனம்’ குறித்து உதயநிதி பேசியதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், உதயநிதியின் கருத்துக்கு ஆதரவும் பல இடங்களில் இருந்து வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ‘மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை, எதிர்க்கட்சியினர் அவதூறாக சித்தரித்து, அரசியல் லாபம் தேடப் பார்க்கிறார்கள். அவர்கள் நினைப்பது, தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி ஒருபோதும் நடக்காது.

சாதிய பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகளை களையவேண்டும் என்ற வகையில்தான் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இன்னும் சாதியப் பாகுபாடுகளும், மனிதனுக்குள் ஏற்றத் தாழ்வுகளும் இருக்கின்றன. இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பேசியதை ‘அரசியல் லாபம்’ பார்ப்பதற்காக இந்துக்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுவதை, இந்துக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும், கடவுளை வழிபடுபவர்கள் தி.மு.க.விற்கு எதிரானவர்கள் என்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தையும் உருவாக்கப் பார்க்கிறது பாசிச பா.ஜ.க. அரசு. தி.மு.க.ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகுதான், அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நிகழ்வும் நடக்க இருக்கிறது. அனைத்து சமுதயாத்தினரையும் அர்ச்சகராக்கியது திராவிடமாடல் அரசு!

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அவர் பேசியதை திரித்துக் கூறுவதை இந்து மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யநினைத்தால், அது அவர்களுக்கே எதிராக போய் முடியும்’’ என்று ஆவேசமாக பேசினார் பூங்கோதை ஆலடி அருணா!

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal