சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை காவலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றக் காவல் முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றக் காவல் முடிந்த போதெல்லாம் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்ஸில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால் நேற்றைய தினம் அவருடைய நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் அவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நோக்கில் நம்பிக்கையுடன் ஷேவிங் எல்லாம் செய்துகொண்டு வந்திருந்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது.

அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.

இந்த நிலையில்தான் நீதிபதி அல்லி ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்?’ என அதிரடியாக கூறியிருக்கிறார். இதனால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal