‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மு.க.ஸ்டாலினை நியமிக்கலாம் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘இந்தியா“ கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நாளை தொடங்குகிறது. நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் “இந்தியா“ கூட்டணியின் சின்னம் மற்றும் கொள்கை முழக்கம் வெளியிடப்பட உள்ளது. மகாத்மா காந்தியடிகள் “வெள்ளையனே வெளியேறு“ முழக்கத்தை மும்பையில் வெளியிட்டார். அதேபோல “பாஜகவே வெளியேறு’’ முழக்கத்தை மும்பையில் நாளை “இந்தியா’’ கூட்டணி வெளியிட இருக்கிறது.

மேலும் “இந்தியா’’ கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆனால் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், நிதிஷ்குமாருக்கு பீகார் மாநிலத்தில் என்ன பலம் இருக்கிறது? அவரை போய் எப்படி “இந்தியா’’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்கிறார்கள்? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அத்துடன் இல்லாமல் காங்கிரஸுக்கு அடுத்ததாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் அதிக எம்.பி.க்கள் உள்ளனர். அந்த கட்சிகளுக்கு “இந்தியா“ கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுக்கலாம் என்ற அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். லோக்சபாவில் காங்கிரஸுக்கு 52, திமுகவுக்கு 24, திரிணாமுல் காங்கிரஸுக்கு 22, ஜேடியூவுக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர்.

பிரசாந்த் கிஷோர் கூறுவதின் அடிப்படையில் “இந்தியா“ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு திமுகவுக்கு அதாவது திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். திமுக ஒருவேளை இப்பொறுப்பை நிராகரித்தால் அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்படலாம்.

கடந்த காலங்களில் மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய முன்னணி என எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பு வகித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இடம்பெற்ற போது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி கடும் இந்துத்துவா போக்கை அக்கட்சி செயல்படுத்தாத வகையில் பார்த்துக் கொண்டதும் கருணாநிதிதான்.

தற்போதும் திமுகவை நோக்கி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வருவதாக கூறப்படுகிறது. இதனை திமுக தலைமை ஏற்குமா? நிராகரிக்குமா? என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.

இதற்கிடையே பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முழு முயற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal