கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் சோர்வுடன், தாடியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய தினம் ‘ஷேவ்’ செய்திருந்தாலும், ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7ம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதாக தெரிகிறது. செந்தில்பாலாஜியிடம் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்றம் காவல் ஆகஸ்ட் 28ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையே அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal