சென்னை சாலிகிராமம், பகுதியில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப் – இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாலிபர் “டிப் டாப்” உடையில் நின்று கொண்டு இருந்த சப்- இன்ஸ்பெக்டர் இளம்வழுதியிடம் சென்று “சார் யாருக்காகவோ காத்து நிற்பதாக தெரிகிறது” என்றபடி நைசாக பேச்சுக் கொடுத்தார்.
மேலும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் 2பேர் தங்கி உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ5ஆயிரம் கட்டணம் என்று கூறினார். உடனடியாக ஒ.கே என்று கூறிய சப்- இன்ஸ்பெக்டர் அழகிகளை நேரில் பார்த்த பின்னர் கட்டண தொகையை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதையடுத்து வாடிக்கையாளர் கிடைத்து விட்டார் என்று நினைத்த வாலிபர் உடன் வருவது போலீஸ் என்று தெரியாமல் சப்- இன்ஸ்பெக்டர் இளம் வழுதியை அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மற்ற போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வருவது சரவணன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.