இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகிறது. அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ந்தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயிலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். வட மாநிலத்தவர்கள் ரெயிலில் பயணம் மேற்கொள்ளும்போது விதிகளை மீறி ரெயில் பெட்டியிலேயே கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

அதன்படி இந்த சுற்றுலா ரெயிலிலும் பயணிகள் ரெயிலுக்குள் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்த ரெயில் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றடைந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். பின்னர் இரவு ரெயில் மூலம் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை சுற்றுலா ரெயில் மதுரை வந்தடைந்தது. இணைப்பு ரெயில் வந்தபிறகு ராமேசுவரத்துக்கு சுற்றுலா ரெயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குள் சுற்றுலா பயணிகள் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இன்று காலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரை வழியாக ரெயில்கள் வரும் என்பதால் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த சில பயணிகள் ரெயிலிலேயே தூங்கினர். மற்றவர்கள் இறங்கி ரெயில் நிலையத்திற்குள் வந்து பிளாட்பாரத்தில் ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் ரெயிலில் இருந்த சிலர் டீ தயாரிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கியாஸ் அடுப்புகளை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தீ ரெயில் பெட்டியில் பரவ தொடங்கியது. கரும்புகையால் ரெயிலுக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கினர்.

இதற்கிடையில் ரெயில் பெட்டியில் தீ மளமள வென பரவ கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்தது. மேலும் அருகில் இருந்த பெட்டிக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் திடீர்நகர், தல்லா குளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் ரெயில் பெட்டியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில் கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரெயில்வே, மாநகர போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் ரெயில் பெட்டியின் அவசர வழியை உடைத்து உள்ளே சென்று சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாகினார். அவர்களது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்களின் விபரம் உடனடியாக முழுமையாக தெரியவில்லை. தீ விபத்து நடந்தபோது 20-க்கும் மேற்பட்டோர் ரெயில் பெட்டியில் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் 10 பேர் இறந்த நிலையில் மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது. மற்றொரு பெட்டி பாதி எரிந்து சேதமானது.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர். அதன்பின் ரெயில் பெட்டியில் சிக்கியவர்களை காயங்களுடன் மீட்டு ரெயில்வே மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை ரெயில்வே கோட்ட மேலா ளர் அனந்த் பத்மநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி னர். தீ விபத்தில் உத்தரபிர தேசம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த சப்தமன்சிங் (வயது 65), மிதிலேஸ்வரி (64) ஆகிய 2 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களின் விபரம் தெரியவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal