திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரத்தில் இருந்து மீண்டும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது, தனியார் பேருந்துகளுக்கு இணையாக இருக்கைகளை சாய்த்துக்கொள்ளும் வசதி கொண்டதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ பேருந்துகள். கடந்த ஆட்சிகாலத்தில் திருச்சி புறநகர் பகுதிகளான துறையூரில் இருந்து சென்னைக்கு இயங்கியது. தற்போது, ‘சூப்பர் டீலக்ஸ்’ பேருந்துகளே துறையூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. இதனால், நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது பற்றி சென்னைக்கு வாரந்தோறும் பயணிக்கும் பயணிகள் சிலர் நம்மை தொடர்பு கொண்டு, ‘‘சார், தற்போது துறையூரில் இருந்து சென்னைக்கு சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளே இயக்கப்படுவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் இரு பக்கமும் இரண்டு சீட்டுகள், நன்றாக சாய்ந்துகொள்ளும் வசதி கொண்டது. தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் மூன்று சீட், இரண்டு சீட் என உள்ளது. இந்த பேருந்துகளில் சென்றால் உடல் அசதி ஏற்படும்.
தற்போது சூப்பர் டீலக்ஸ் பஸ்களை இயக்காததால், தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். துறையூர் டூ சென்னைக்கு ரூ.500 ஆக இருந்த டிக்கெட் விலை, தற்போது, ரூ.700 ஆக தனியார் பேருந்து நிர்வாகத்தினர் உயர்த்திவிட்டார்கள். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சூப்பர் டீலக்ஸ் பஸ் இயக்கினால், தனியார் பேருந்துகளில் செல்வது குறையும். எனவே, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் விரைவில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களை இயக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.
இது பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் பேசினோம்.
‘‘சார், நாங்கள் டூட்டிக்கு சென்று ஒரு சிங்கிள் அடித்தவுடன் ‘எவ்வளவு கலெக்ஷன்’ என மேலாளரே போன் போட்டுக் கேட்கிறார். எங்களிடம் கலெக்ஷனை வசூல் பண்ணுவதில் காட்டும் அக்கறை, பேருந்துகளை பராமரிப்பதிலும் காட்டவேண்டும். பயணிகளின் நலனிலும் அக்கறை காட்டவேண்டும்.
அதே போல், பயணிகளும் கொடுக்கும் காசிற்கு வசதியாக செல்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும். எதையும் பார்ப்பதில்லை. எங்களையும், பயணிகளையும் வருத்தி கல்லா கட்டி நல்ல பெயர் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். எனவே, துறையூர், உப்பிலியபுரம் பணிமனைக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ பேருந்து சேவையை மீண்டும் துவக்கி, தனியார் பேருந்துகள் அடிக்கும் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இப்படி எங்களை வருத்தி வசூல் செய்தாலும், ஓய்வு பெற்ற பலன்களை ஆண்டுகள் கழித்து கொடுக்கின்றனர். எப்போது கேட்டாலும், அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்கின்றனர்’’ என்றனர் வருத்தத்துடன்.
ஒரு வேளை தனியார் பேருந்துகளில் கல்லா கட்டுவதற்காக, ‘சூப்பர் டீலக்ஸ்’ பேருந்துகளை இயக்காமல் இருக்கிறார்களோ என்னவோ..?