‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள். அது மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அப்படியொரு சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது.
பெங்களூரு கிழக்கு மண்டல போலீசுக்கு வித்தியாசமான புகார் வந்துள்ளது. வழக்கமாக திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக இளைஞர் மீது பெண்கள் புகார் அளிப்பார்கள். பெங்களூருவில் 63 வயதான மூதாட்டி, 70வயதாகும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த 63 வயது மூதாட்டி பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர் இறந்துவிட்டார். அவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல்.-ல் நிறுவனத்தில் மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற 70 வயதான ஒருவருடன் மூதாட்டிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
எப்படி பழக்கம் என்றால், முதியவரின் மகனுக்கு பெண் கிடைக்கவில்லை. பெண் தேடித்தான் அவரிடம் சென்று பேசி இருக்கிறார். நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் இருந்தால் சொல்லும்படியும் மூதாட்டியிடம், அந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இந்த பெண் பார்க்கும் விவகாரம், அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறி உள்ளனர். இந்த முதுமை காதல் அவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது.
இதனால் பிடித்த இடங்களுக்கு எல்லாம் ஒன்றாக சென்று முதுமையை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மூதாட்டியை திருமணம் செய்வதாக முதியவர் கூறி இருக்கிறார், அதன்பிறகு மூதாட்டி, அந்த முதியவரின் மகனுக்கு பெண் பார்த்து கொடுத்துள்ளார். அதையடுத்து முதியவரின் மகனுக்கு திருமணமும் நடந்திருக்கிறது.
ஆனால் தன்னுடைய மகனுக்கு திருமணம் நடந்த பின்பு, மூதாட்டியுடன் பேசுவதை அந்த அதிகாரி நிறுத்தி விட்டாராம். அத்துடன் மூதாட்டியை அவர் திருமணம் செய்யவும் மறுத்துவிட்டராம். தன்னை ஏமாற்றிய முதியவர் மீது அந்த மூதாட்டி பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
இது தொடர்பாக அந்த மூதாட்டி நேற்று செய்தியாளர்களை சந்தித்தும் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து விவரித்தார்.அப்போது அவர் கூறுகையில், “எனக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிக்கும் 5 ஆண்டுக்கு முன்பு பழக்கமானது. அவரது மகனுக்கு பெண் பார்த்து கொடுத்தால், என்னை திருமணம் செய்வதாக என்னிடம் கூறினார்.
இதனை நம்பி கடந்த 5 ஆண்டுகளாக பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பழகினோம். அவரது மனைவியின் புடவைகளை கொடுத்து, அதனை தான் கட்டிக் கொண்டு வரும்படி கூறுவார். நான் வேலை செய்த நிறுவனத்திற்கு வந்து தன்னுடன் வரும்படி அழைத்து செல்வார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ஞாயிற்றுக்கிழமை விடாமல் 2 பேரும் வெளியே சுற்றினோம். அவரை நம்பி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகனை விட்டு பிரிந்து வீட்டில் இருந்து வெளியே வந்து என்னை, தற்போது திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவரது பிள்ளைகள் என்னை திருமணம் செய்ய கூடாது என்று கூறுவதால் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்னை பெண் பார்க்கும் புரோக்கராக நினைத்தாகவும், அதனால் திருமணம் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார். தற்போது என்னை அவர் ஏமாற்றி விட்டதால் நடுத்தெருவில் நிற்கிறேன்” என அந்த மூதாட்டி வேதனை தெரிவித்தார்.