சென்னை மாநகரில் முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் பணிகள் நடக்கிறது. இன்னும் சில இடங்களில் பணிகள் மிகவும் மெத்தனமாக நடக்கிறது. குறிப்பாக திருவஞ்சேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் துர்நாற்றம் வீசுவாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது பற்றி பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினோம். ‘‘சார், செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம், திருவஞ்சேரி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டினார்கள். ஆனால், பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும் கால்வாய் அமைக்க கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெறவில்லை.

சென்னையில் திடீர் திடீரென்று மழை வெளுத்துவாங்கி வருகிறது. இந்த நிலையில்தான் திருவள்ளுவர் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கியிருக்கிறது. மழை நீருடன் கழிவு நீரும் கலப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுகளாகியிருக்கிறது.

இந்த தெருவில் வசிக்கும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் அனுதினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், இந்த தெருவில் வசிக்கும் மக்கள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஒப்பந்ததாரருக்கும் பலமுறை நினைவூட்டியும் அவர்கள் மெத்தனமாக பதில் சொல்வதாக சொல்கிறார்கள். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையீட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ‘மர்ம காய்ச்சல்’ அச்சத்தை போக்க வேண்டும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal