தமிழ்நாட்டையே பிரமிக்க செய்யும் வகையில் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை முதல் தொடங்கி விமரிசையாகவும், எழுச்சியோடும் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் சாரை சாரையாக வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர். சென்னையில் இருந்து நேற்று சிறப்பு ரெயிலில் 1,300 பேர் மதுரை வந்தடைந்தனர்.

இதேபோல், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளின் தலைமையில் பஸ், வேன்களில் மாநாட்டிற்காக குவிந்துள்ளனர். இதனால் மதுரை, எப்போதும் இல்லாத அளவுக்கு அ.தி.மு.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. முன்னதாக மதுரை வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட கட்சியினர் தங்கள் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வது போல் மாநாட்டில் பங்கேற்க மதுரையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிந்ததால் மாநாட்டு திடல் தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் மதியம் இரண்டு மணிக்கு மேல் மாநாட்டு திடலில் பல லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களிலிருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான கார்களிலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர். அதிலும் ஏராளமானோர் மனைவி, பெற்றோர், குழந்தைகளுடனும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். இதனால் மாநாட்டுக்கு வந்த ஏராளமான வாகனங்களை ஒழுங்குபடுத்த அ.தி.மு.க. பேரவை நிர்வாகிகள் சுமார் 3,000 பேர் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தன. இதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்த மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் மாலையில் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இதற்காக அவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடும் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் எழுச்சி உரையாற்றுகிறார். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ பூக்கள் தூவப்பட்டன. அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தொடங்கி 51-ம் ஆண்டினை குறிக்கும் விதமாக 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். அதன்பின் ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்தனர். முன்னதாக மாநாட்டுக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யப்பட்ட 5.5 அடி உயர வெள்ளி வேல் வழங்கினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal